பொதுவாக நமது தலையில் சுமார் 1 லட்சத்திலிருந்து ஒன்றரை லட்சம் முடிகள் உள்ளன. வயோதிக காலத்தில் இந்த தலைமுடிகள் கொஞ்சம், கொஞ்சமாக உதிர தொடங்குகின்றன.
ஒவ்வொருவரின் மரபணுக்களை பொறுத்து, இந்த முடி உதிர்தல் அளவு, மற்றும் வயது மாறுபடும். ஒரு குறிப்பிட்ட காலக்க்கட்டத்தில் 10 சதவீத முடியின் வளர்ச்சி தடைபட்டு அவை உதிர ஆரம்பிக்கின்றன. சுமார் 4 முதல் 6 ஆண்டுகளில் அடுத்த 10 சதவீத தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாளொன்று சுமார் 50 லிருந்து 150 முடிகள் வரை சாதாரணமாக உதிரலாம்.
- ஆனால், அசாதாரணமாக மிகவும் இளம் பருவத்தில் அளவுக்கு அதிகமான முடி உதிர்தல் ஏற்பட்டு, மிக விரைவாக நிரந்தமாக முடி உதிர்ந்து விடுவதே வழுக்கை எனப்படுகிறது.
பல்வேறு காரணங்களை பொறுத்து 3 வகையாக வழுக்கைகள் ஏற்படுகின்றன. உச்சந் தலையில் ஆரம்பித்து பின்னோக்கி முடி உதிர்தல் ஆரம்பிப்பது, நெற்றியில் ஆரம்பித்து உச்சந்தலை நோக்கி முடி உதிர்ந்துகொண்டு போவது மற்றும் பக்க வாட்டிலிருந்து உச்ச தலைநோக்கி முடி உதிர்தல் ஆகியவை இதில் அடங்கும்.
ஹார்மோன் மாறுபாடு, வயோதிகம், தொடர்ச்சியாக நோய்வாய்ப்படுதல் மற்றும் கொடியநோய்கள், மருந்துகளின் பக்கவிளைவுகள், உடல் மற்றும் மனரீதியான உளைச்சல்கள், சத்துக்குறைவான உணவு பழக்க வழக்கம் போன்றவை வழுக்கையை ஏற்படுத்தும் மிக முக்கிய காரணிகளாகும்.
நவீன மருத்துவ முறையில் செயற்கை முடிகள் அமைக்க பல்வேறு வசதிகள் உள்ளன. முறையான மருத்துவ ஆலோசனைகள் பெற்று, இந்த சிகிச்சைகளை பெறலாம்.
தலை முடி வளரும் என்ற நம்பிக்கையில், தேவை இல்லாத மருந்துகளை உட்கொண்டால், அது கெடுதலையே ஏற்படுத்தும்.