உடல் பருமனைத் தவிர்ப்பதற்கும், உடல் மெலிவதற்கும் சிலர் தங்களது தூக்கத்தைக் குறைத்துக் கொள்ள முனைகின்றனர்.
ஆனால், இது தவறான வழிமுறையாகும். அதிகமாக தூங்கினால், உடல் எடை அதிகரிக்கும் என்பது மிகவும் தவறான எண்ணம். மாறாக, நாளொன்றுக்குப் போதுமான நேரம் தூங்கவில்லை என்றால்தான் உடல் பருமனாகிறது.
இதுதொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ஜப்பானிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், தினமும் 5 மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குபவர்களின் உடல் அதிக அளவில் பருமனடைகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இத்தகையோருக்கு நீரிழிவு நோய் வருவதற்கும் அதிக அளவில் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
போதுமான கால நேரத்தில் தூங்கவில்லை என்பதால், வழக்கத்துக்கும் அதிகமாக பசி எடுக்கிறது. அதன் காரணமாக உணவின் அளவு அதிகரிப்பதோடு, அவ்வப்போது நொறுக்குத் தீனிகளையும் அதிகமாக புசிக்க நேர்கிறது.
இதைத் தவிர்ப்பதற்கு, தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது அவசியமாகிறது.